கோவில்பட்டி ரயில்வே சுரங்க பாதையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் பேருந்து சிக்கிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-11-09 12:59 GMT

கோவில்பட்டி ரயில்வே சுரங்கப் பாதையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் நேற்று மாலை 6 மணியளவில் பெய்த பலத்த மழையின் காரணமாக கோவில்பட்டி - இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கியது. அப்போது, மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த தனியார் பேருந்து சுரங்கப் பாதையில் சிக்கியது.

இதையெடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு பேருந்தில் பயணித்த 28 நபர்களையும் பத்திரமாக மீட்;டனர். பேருந்தும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பாக மழைநீர் தேங்கிய சுரங்கப் பாதையில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பல்வேறு துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு துறையினருக்கும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி மற்றும் காலஅளவு நிர்ணயம் செய்யப்பட்டு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பேசியதாவது:-

சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரின் அளவை கண்காணித்து தேங்கும் நீரின் அளவு அதிகரிக்கும் பட்சத்தில் அதிக சக்தி கொண்ட மோட்டார்கள் மூலம் இடைவெளியின்றி நீரை வெளியேற்ற வேண்டும். சுரங்கப்பாதையில் தேங்கும் அதிகளவு நீரை கண்டு உணர நெடுஞ்சாலைத்துறை, கோட்டப்பொறியாளர் அபாயகரமான நீர்;மட்ட அளவை குறியீடு செய்ய வேண்டும்.

மழைநீர் தேங்கினால் சுரங்கப்பாதையில் வேறு வாகனங்கள் நுழையாதவாறு காவல்துறையினர் இருபுறமும் தடுப்புகளை உடனடியாக அமைக்க வேண்டும். சுரங்கப்பாதையின் அருகே போக்குவரத்துக்காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் கோவில்பட்டி நகராட்சியினர் சுரங்கப்பாதையில் அமைந்துள்ள மணலை அகற்ற வேண்டும். சுரங்கப்பாதையில்  முறையான சரிவை அமைக்க வேண்டும்.

கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கோவில்பட்டியில் உள்ள இதர மூன்று இரயில்வே சுரங்கப்பாதையில் நீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் இத்தகைய இடர்களின் போது அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினர் அணுகுசாலை விரிவாக்கப் பணிகளை டிசம்பர் மாதத்திற்கு முன்பாக ஆரம்பித்து ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். சட்ட ரீதியான தடை ஏதுமின்றி பணிகள் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்ய வேண்டும். கோவில்பட்டி காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருடன் இணைந்து வீடுகளின்றி தெருக்கள் மற்றும் பாலங்களின் அடியில் வாழும் நபர்களை அரசு உதவி பெறும் முதியோர் இல்லங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து வட்டாட்சியர்களும், வட்டார வளர்ச்சி அலுவலர்களும் தங்கள் பகுதிகளுக்குள் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கப்பாதையில் அபாயகர அளவு குறியீட்டிற்கு மேல் மழைநீர் தேங்கும் போது எவ்வித வாகனங்களும் சுரங்கப்பாதையினுள் செல்லக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்தார்.

Tags:    

Similar News