தூத்துக்குடி அதிமுகவில் வாக்குச்சாவடி முகவர் அமைக்கும் பணி இறுதிக்கட்டம்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குச்வாவடி முகவர் அமைக்கும் இறுதிக்கட்டப் பணி நடந்து வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அதை எதிர்கொள்வதற்காக அனைத்துக் கட்சிகளும் வாக்குச்சாவடி முகவர் குழு அமைப்பது, வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஓட்டு கேட்கும் குழு என விறுவிறுப்பு காட்டி வருகின்றன.
தமிழகத்தில் பிரதான கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் தேர்தல் பணியில் முனைப்பு காட்டு வருகின்றன. ஆளும் கட்சியான தி.மு.க., பூத் கமிட்டியை அமைத்து தலைமைக்கு அனுப்பி விட்டது. அ.தி.மு.க., பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விறுவிறுப்பு காட்டி வருகிறது.
19 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதில், 7 பேர் போட்டோ, ஆதார் எண், செல்போன் நம்பர் பெற்று பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இந்த பூத் கமிட்டியில், 5 பேர் இளைஞர், இளம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுகவில் உள்ள சட்டசபை தொகுதிகளான கோவில்பட்டியில் 286 வாக்குச் சாவடிகள், விளாத்திகுளத்தில் 260 வாக்குச் சாவடிகள், ஓட்டப்பிடாரத்தில் 262 வாக்குச் சாவடிகள் என 808 வாக்குச் சாவடிகளுக்கு முகவர் குழு அமைக்கப்பட்டு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் அ.தி.மு.க.,வினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
துாத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கான பூத் கமிட்டி இறுதி செய்யும் பணி கோவில்பட்டி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதை துாத்துக்குடி வடக்கு மாவட்ட பூத் கமிட்டி பொருப்பாளரும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளருமான காஞ்சி பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., ஆகியோர் பார்வையிட்டனர்.
அவர்களுடன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், லெட்சுமணபெருமாள், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.