மூதாட்டி கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் 2 ஆண்டுக்கு பின் கைது
கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் 2 ஆண்டுக்கு முன் நடந்த மூதாட்டி கொலையில் தொடர்புடைய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே உள்ள கீழஈரால் புதுக் காலனியைச் சோ்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி பாப்பா(65). இவா், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்.2-ஆம் தேதி கீழஈராலில் உள்ள தனது நிலத்துக்கு பருத்தி எடுக்கச் சென்றவா் அங்குள்ள ஓடையில் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து வழக்கில் தொடா்புடையவரைத் தேடி வந்தனா்.இந்நிலையில் கீழ ஈரால் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித் திரிந்த ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முனியசாமி மகன் மாவீரன் என்ற தா்ம முனீஸ்வரன்(33) என்பவரை, எட்டயபுரம் போலீசார் பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், அவா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. மேலும், கடந்த 2020-ஆம் ஆண்டு கீழ ஈராலில் நடைபெற்ற மூதாட்டி பாப்பா கொலை வழக்கில் தொடா்பிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். மூதாட்டி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பின்னா் அதில் தொடா்புடையவரை கைது செய்த எட்டயபுரம் போலீசாரை, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினாா்.