மக்களுக்கான திட்டங்களை தந்து கொண்டிருக்கும் ஆட்சி: கனிமொழி எம்.பி. பேச்சு
மக்களுக்கான திட்டங்களை தந்து கொண்டிருக்கும் ஆட்சியாக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உள்ளது என, கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமம் மற்றும் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் தலைக்காட்டுபுரம் ஊராட்சி, நீராவிபுதுப்பட்டி ஊராட்சி, ராமனூத்து ஊராட்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற மக்கள் களம் நிகழ்ச்சியில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்றார்.
மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் அரசு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கி கனிமொழி எம்.பி. பேசியதாவது:
பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு விரைவில் நிறைவேற்றி தரப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்க உள்ளார்.
மக்களுக்கான திட்டங்களை தந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி. மாநிலம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூடுவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு உதவக்கூடியவர்களாக மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு உதவக்கூடியவர்கள் நம்மை மதிக்கக்கூடியவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
தொடர்ந்து, எத்திலப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாய நலக்கூடத்திற்கான அடிக்கல்லை கனிமொழி எம்.பி. நாட்டினார். மேலும், தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் ரூ.10.38 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சர் கிராம சாலைகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.93 கோடி மதிப்பில் பருவக்குடி, எட்டயபுரம் விளாத்திகுளம், வேம்பார் சாலையிலிருந்து நீராவிபுதுப்பட்டி வரை செல்லும் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் ரூ.76. 95 லட்சம் மதிப்பில் பருவக்குடி எட்டயபுரம் விளாத்திகுளம் வேம்பார் சாலையில் இருதந்து இராமனூத்து வரை செல்லும் சாலை அமைக்கும் பணியினை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான்தோழன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.