கோவில்பட்டி எழுத்தாளருக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு
கோவில்பட்டியில் கரிசல் இலக்கிய ஆய்வு மையத்தை அமைக்க வேண்டும் என பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்தார்.;
மத்திய அரசின் பால புரஸ்கர் விருது கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கும், எழுத்தாளர் ராம் தங்கத்துக்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பால புரஸ்கர் விருது பெறும் எழுத்தாளர் உதயசங்கர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஆவர்.
இவர், 1960 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்தவர். இவர் தந்தை கார்மேகம் மற்றும் தாயார் கமலம். இவர் மல்லிகா என்பவரை ஏப்ரல் 12, 1987 அன்று திருமணம் செய்துக் கொண்டார். இவருக்கு நவீனா, துர்கா என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவரும் ஹோமியோபதி மருத்துவர்கள் ஆவார்கள்.
எழுத்தாளர் உதயசங்கர் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்றவர். ரயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்று இருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான சாகித்திய பால புரஸ்கர் விருது உதய சங்கருக்கு அவர் எழுதிய ஆதனின் பொம்மை நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
1990 ஆம் ஆண்டுக்கு பிறகு குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்ற முறையில் குறிப்பாக இளைய தலைமுறையிடம் நாம் சரியான விஷயங்களை கொண்டு செல்ல வேண்டியதிருக்கிறது. நாம் குழந்தைகளிடம் பகுத்தறிவு அறிவியல் பூர்வமான விஷயங்களை கொண்டு செல்ல வேண்டும் என்றால் நாம் குழந்தைகளை நோக்கி எழுத வேண்டும் என்று தோன்றியதால் கிட்டத்தட்ட 51 நூல்களை எழுதி இருக்கிறேன்.
இதில் 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கானவை. 9 நூல்கள் இளையோருக்கானவை இந்த நூல்களில் எல்லாம் குழந்தைகளுக்கு அரசியலை சொல்லி இருக்கிறேன் என்று சொல்லலாம். 68 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் ஒன்றை கோவில்பட்டியில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம் அந்தக் கோரிக்கையை அரசு ஏற்று புதிய எழுத்தாளர்களை படைப்பாளர்களை ஆய்வாளர்களை உருவாக்குவதற்கு ஒரு மையம் அமைக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் கி ராஜநாராயணன் மணிமண்டபத்தை அதற்காக பயன்படுத்தலாம் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன் என எழுத்தாளர் உதயசங்கர் தெரிவித்தார்.