திமுக அரசின் தோல்விகளை மறக்கவே சனாதனம் குறித்து பேச்சு: டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
திமுக அரசின் தோல்விகளை மறைப்பதற்காகவே சனாதனம் குறித்த பேச்சுக்களை பூதாகரமாக்கி வருகின்றனர் என, கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு விருந்தினர் மாளிகையில் புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவில்பட்டியை மையமாக வைத்து புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தினுடைய வடக்கு பகுதி வளர்ச்சி பெற வேண்டும் என்று சொன்னால் கோவில்பட்டி மையமாக வைத்து ஒரு மாவட்டம் விரைவில் உருவாக்கப்பட வேண்டும். அதற்குண்டான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.
திமுக அரசு ஊழல் அரசு என்கிற விஷயம் இந்தியா முழுவதும் தெரிய வருகையில் திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத போது எல்லா தளங்களிலும் மிகப்பெரிய தோல்வியை தழுவிக் கொண்டு வரும்போது அதை மடைமாற்றம் செய்வதற்காக அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இப்போது சனாதனம் என்கிற பூதாகரத்தை கையில் எடுத்திருக்கிறார்கள்.
ஆளும் திமுக தமிழக மக்கள் மத்தியில், ஒரு பீதியை கிளப்பி சனாதனம் தான் எதிரி என்பதைப் போல ஒரு புது கதையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தோல்வியை மறைப்பதகாக மடைமாற்றம் செய்கிறார்கள். இவர்கள் சொல்கிற சனாதானம் மக்களுக்கு கேடு அல்ல. திராவிடம் தான் தமிழ் சமுதாயத்திற்கு கேடாக உள்ளது. 2021 தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அந்த கூட்டணியில் விரிசல் என்று யாரும் கனவு காண வேண்டாம். தேசிய ஜனநாயக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதியை விரும்பி எடுக்கிற இடத்தில் நாங்கள் உள்ளோம். கேட்கிற இடத்தில் இல்லை என, டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.