கழுகுமலை கழுகசாலமூர்த்தி கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி: பக்தர்கள் ஆரவாரம்
கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை கழுகசாலமூர்த்தி திருக்கோவிலில் சூரசம்ஹராம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
தமிழகத்தின் தென் பழனி என்று அழைக்கப்படுவது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை தான். இங்குள்ள புகழ்பெற்ற குடவரை கோவிலான கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மற்ற முருகன் கோவிலில் சஷ்டி அன்று தான் சூரசம்ஹாரம் நடைபெறுவது வழக்கம். ஆனால் அதற்கு முதல் நாளே தாரகாசூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் நடைபெறுவது வழக்கம்.
இதனை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் வருவது வழக்கம். மறுநாள் மற்ற சூரர்களை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்வார். கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக நடைபெறவில்லை. இந்தாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி வள்ளிரூதெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு விதிமுறைகளின் படி கோவில் வளாகத்திற்குள் தான் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தாரகாசூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்பாளை எழுந்தருளச் செய்யும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. கழுகாசலமூர்த்தி எழுந்தருளி கோயில் வளாகத்திற்குள் எளிமையான முறையில் தாரகாசூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடந்தது. தாரகாசூரனை வதம் செய் முருகப்பெருமான் சப்பரத்தில் எழுந்திருளி வர, வதத்தினை தவிர்க்க நாராதர் தூது செல்லும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன. இதையெடுத்து முருகப்பெருமான் தாரகாசூரனை வதம் செய்தார். வதம் நடந்த பின்னர் மற்ற சூரர்கள் சப்பரத்தினை சுற்றி வந்து கோவில் தெப்பக்குளத்தில் குதித்து தப்பித்து ஒளிந்து கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது. மற்ற சூரர்களளை நாளை நடைபெறும் சூரசம்ஹாரம் நிகழ்வில் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்வார்.வேறு எந்த முருகன் கோயிலிலும் காண இயலாத அரிய நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.