கோவில்பட்டியில் ஆசிரியை இடமாற்றத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்
கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சிதம்பரம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை வகுப்புகள் உள்ளன. இதில் 170 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் . இங்கு கோவில்பட்டியைச் சேர்ந்த உஷா ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர், தற்போது வில்லிசேரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆங்கில ஆசிரியை உஷா இடமாற்றம் செய்யபப்பட்டதைக் கண்டித்து அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வாயில் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையெடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நாலாட்டின்புத்தூர் காவல் ஆய்வாளர் சுகாதேவி மற்றும் காவல்துறையினர் மாணவ மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கல்வித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியை உஷா தேவி சில மாதங்களுக்கு முன்பு தான் வேறு பள்ளியில் இருந்து இங்கு பணிக்கு சேர்ந்துள்ளார். சிறப்பாக பாடம் நடத்துவது மட்டுமின்றி, மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது மட்டுமின்றி, மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஆசிரியை உஷா செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே ஆசிரியை உஷாதேவி பணியிட மாற்றம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.