கோவில்பட்டியில் தேசியக்கொடி வடிவில் அணிவகுத்து அசத்திய மாணவர்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் தேசியக் கொடி வடிவில் மாணவ, மாணவிகள் அணிவகுத்து அசத்தினர்.;
நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதேபோல, சென்னை கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆட்சியர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வது வழக்கம். மேலும், சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள், காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், மாவட்டத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவது உண்டு. மேலும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம். இதேபோல, நாடு முழுவதும் சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் பல்வேறு தரப்பினர் கொண்டாடப்படுவதும் உண்டு.
அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் தேசியக் கொடி வடிவில் அணி வகுத்து நின்ற காட்சி காண்போரை மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி சார்பில் பாரத நாட்டின் 77 ஆவது சுதந்திர தினத்தை வரவேற்கும் வகையில் தேசிய கொடி வடிவில் மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் தேசியக் கொடி வடிவில் அணிவகுத்து நின்று அசத்தி தேசிய கொடியை அழகுபடுத்தினர். இந்த நிகழ்ச்சியில், பள்ளி செயலாளர் கண்ணன், தலைமையாசிரியர் செல்வி, பள்ளிக்குழு உறுப்பினர்கள் ராஜா, அமரேந்திரன், மணிக்கொடி, பொன் ராமலிங்கம், சமூக ஆர்வலர் முத்து முருகன் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.