காலை உணவை மாணவர்கள் புறக்கணித்த விவகாரம்: பிரச்னையை தீர்த்த கனிமொழி எம்.பி.
காலை உணவு திட்டத்தில் பட்டியலினத்தனர் சமைத்த உணவை புறக்கணித்த பள்ளியில், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கனிமொழி எம்.பி நேரில் பேசி, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார்;
தமிழகத்தில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த ஆண்டு காலை உணவு திட்டம் நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பள்ளிகளில் தொடங்கப்பட்டது. கடந்த மாதம் 25 ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சின்னமலைக்குன்று ஊராட்சியில் செயல்பட்டு வரும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 11 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சமீபத்தில் இந்த பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் குழந்தைகளுக்கு அதே ஊரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த முனிய செல்வி என்பவர் சமையல் செய்து உணவு கொடுத்துள்ளார்.
இதற்கு அங்கு பயிலக்கூடிய மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் பெற்றோர்கள் காலை உணவு திட்டத்தை புறக்கணித்தனர். தங்கள் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் சாப்பிட மாட்டார்கள் என்று கூறினார். இந்தப் பிரச்னை நேற்று ஊடகங்களில் வெளியான நிலையில் அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் உசிலம்பட்டி பள்ளியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்தப் பிரச்னை நிலவுவதாகவும் உடனே இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு மாணவ, மாணவிகள் காலை உணவு சாப்பிட ஏற்பாடு செய்யப்படும் என்றும் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், மாணவ, மாணவிகள் காலை உணவை புறக்கணித்த பிரச்னை குறித்து கேட்டறிந்த துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று குறிப்பிட்ட அந்தப் பள்ளிக்கு நேரில் சென்றார்.
அங்கிருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் அங்கே மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அவர் காலை உணவை அருந்தினார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.