எட்டயபுரத்தில் மாநில விநாடி-வினா போட்டி: 200 மாணவர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான விநாடி - வினா போட்டியில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.;

Update: 2023-10-07 14:28 GMT

விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில், கல்வி நிலையங்களில் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கேள்வி கேட்டப்பட்டு சில விநாடிக்குள் பதில் அளிக்கும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்படுவது. இந்தப் போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொள்வர்.

அதந்படி, தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழ ஈரால் கிராமத்தில் அமைந்துள்ள தொன்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பள்ளி மாணவர்களின் நுண்ணறிவு கூர்மையை வளர்க்கும் வகையில் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் விநாடி-வினா போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பல்வேறு பகுதிகளில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 204 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவ்வாறு கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு முதற்கட்டமாக திறனறி எழுத்து தேர்வு நடத்தப்பட்டு பின்னர் அதில் இருந்து 5 குழுக்களாக 10 மாணவர்களை தேர்வு செய்து ஒவ்வொரு குழுவிற்கும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பெயரிட்டு இரண்டாம் கட்ட போட்டி நடைபெற்றது.

7 சுற்றுகளாக விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த விநாடி - வினா போட்டியில், முதல் இரண்டு இடங்களை கோவில்பட்டி கே.ஆர்.ஏ (சிபிஎஸ்சி) மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளும், மூன்றாம் இடத்தை தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளும் பிடித்து வெற்றி பெற்றனர்.

அதைத்தொடர்ந்து மாநில அளவிலான விநாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில், கல்லூரி மற்றும் கல்வித் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News