அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பேரணி

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வலியுறுத்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கோவில்பட்டியில் பள்ளி மாணவ மாணவிகளின் பேரணி நடைபெற்றது;

Update: 2023-06-10 12:54 GMT

கோவில்பட்டியில் நடைபெற்ற பள்ளி மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள்.

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகத்தில் ஜூன் 12 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. வழக்கமாக அரசுப் பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில்தான் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதால், அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும் என பல்வேறு அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும்  வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் சரியாக இருந்தால் பெற்றோர் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பள்ளி மாணவ மாணவியர்களின் பேரணி நடைபெற்றது. பேரணி கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள கால்நடை மருத்துவமனை முன்பு தொடங்கி நகராட்சி நடுநிலை பள்ளி வரை நடைபெற்றது.

இந்தப் பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தும் விதமாக பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு சென்றனர். மேலும், அப்துல் கலாம் போன்ற தலைவர்களின் படம் பொறித்த முகமூடிகளை அணிந்து கொண்டும் மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகியான பேராசிரியர் சுரேஷ் பாண்டி மற்றும் பலர் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், மாணவ, மாணவிகள் சிலம்பாட்டம் விளையாடிக் கொண்டும் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News