‘பசுமை இந்தியாவை உருவாக்குவோம்’- கோவில்பட்டியில் பள்ளி மாணவர்கள் உறுதியேற்பு
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவு தினம், கோவில்பட்டி பள்ளியில் கடைபிடிக்கப்பட்டது.;
நமது நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், இந்திய அணு விஞ்ஞான வளர்ச்சியின் தந்தையுமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் நினைவு தினம், ஜூலை 27 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் இன்று அப்துல் கலாம் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நினைவு தின நிகழ்ச்சிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டு அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது, அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றிடவும், அதிகளவில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமை இந்தியாவை உருவாக்கிடவும், விருப்பமான துறைகளை தேர்வு செய்து வெற்றி பெறவும், இந்தியா வல்லரசாக உருவாகிட பாடுபடவும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு நாடார் நடுநிலைப்பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி அனைவரையும் வரவேற்றார். அப்துல் கலாமின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி பசுமை இந்தியாவை உருவாக்கிட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், நிகழ்ச்சியின்போது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நாடார் நடுநிலைப்பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் மணிக்கொடி டிபன் பாக்ஸ் வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர்கள் டாபின்மேரி, பிருந்தாதேவி, ஜெபஅகிலா, நித்திய ஸ்ரீ, நிர்மலா தேவி, ராமச்சந்திரன் உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் அருள் காந்தராஜ் நன்றி கூறினார்.