கோவில்பட்டியில் மண் சட்டியை கையில் ஏந்தி பா.ஜ.க.வினர் நூதன போராட்டம்
கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மீது குற்றச்சாட்டிய பா.ஜ.க.வினர் மண்சட்டியை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வு என்ற பெயரில் அப்பாவி ஆட்டோ தொழிலாளர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்திய பின்னரும் சம்பந்தம் இல்லாத வகையில் வேறு பல வண்டிகளின் அபராத தொகையையும் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
அபராதம் செலுத்திய பின்னும், கூடுதல் பணம் செலுத்தினால் தான் வாகனத்தை ஒப்படைப்போம் என்று வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் கூறுவதாக குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க.வினர், அபராதம் விதிக்கப்படுவதை கண்டித்து கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
பா.ஜ.க.வின் வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமையில் கையில் மண்சட்டி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. மேலும், போராட்டத்தின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியர்களை கண்டித்து கண்டன கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.
இதற்கிடையே, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று போலீசார் கூறியதால் கையிலிருந்த மண் சட்டியை தரையில் போட்டு உடைத்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த 17 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்தனர்.
இதற்கிடையில் அபராதம் என்ற பெயரில் லஞ்சம் கேட்பது தொடர்பாக ஆட்டோ டிரைவர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஊழியர்கள் இடையிலான உரையாடல் ஆடியோ வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.