கோவில்பட்டியில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
கோவில்பட்டி பகுதியில் அரசு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசும், உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், மாணவர்களுக்கு உயர் கல்விவழிகாட்டுதல் நிகழ்ச்சியும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடந்த 13 ஆம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி இல்லத்தார் சமுதாய சங்கத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் இன்ஜினீயர் மாரிக்கண்ணன் முன்னிலை வகித்தார்.ஸ்ரீ நாராயணகுருகல்வி வளர்ச்சி குழு செயலாளர் சங்கர் அனைவரையும் வரவேற்றார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முருக சரஸ்வதி, பொதுநல மருத்துவமனை மருத்துவர் வேலம்மாள், துணை வட்டாட்சியர் பொன்னம்மாள், பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் இல்லத்தார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாரதி, நிர்மலா, சித்ரா, கலைஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கோமதி சங்கர், ஜெயக்குமார், கோபாலகிருஷ்ணன், தினேஷ் பாலாஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு ஆலோசகர் திருப்பதி கணேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.