கோவில்பட்டியில் காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பலை பிடித்த போலீசார்!
கோவில்பட்டி அருகே காரில் சென்று ஆடுகள் திருடிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருடப்பட்ட ஆடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த பரமசிவன் மனைவி பெருமாள்கனி (56) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை கடந்த 12.10.2023 அன்று வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்தபோது, அங்கு வந்த சிலர் ஒரு ஆடு மற்றும் 2 ஆட்டுக்குட்டிகளை காரில் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெருமாள்கனி அளித்த புகாரின் பேரில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், என். புதூர் பகுதியை சேர்ந்த தனசேகரன் மகன் கமலேஷ் கிரண் (21), ஓட்டப்பிடாரம் வடக்கு பரும்பூர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் கணேசன் என்ற முருகன் (19), மருதன்வாழ்வு பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி மகன் பாலமுருகன் (20) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகியோர் சேர்ந்து பெருமாள்கனியின் வீட்டில் இருந்த ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளை காரில் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து நாரைக்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் கமலேஷ் கிரண், கணேசன் என்ற முருகன் மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய இளஞ்சிறாரை ஒருவரை பிடித்து திருநெல்வேலி அரசினர் கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூபாய் 15,000 மதிப்புள்ள ஆடு மற்றும் 2 ஆட்டுக்குட்டிகளையும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நரைக்கிணறு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கமலேஷ் கிரண் மீது ஏற்கெனவே திருச்சி மாவட்டம் கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், கணேசன் என்ற முருகன் மீது ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், கடம்பூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், மணியாச்சி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், பசுவந்தனை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் என 6 வழக்குகளும் உள்ளன குறிப்பிடத்தக்கது.