தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது - கவலைப்பட வேண்டிய அவசியமில்லை : கனிமொழி எம்.பி.,
தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது - கவலைப்பட வேண்டிய அவசியமில்லை - கனிமொழி எம்பி
சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தம்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை தமிழகஅரசு முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து காப்பாற்றும் என்றும், தமிழ் மண்ணின் பெருமைகளை எந்த காலகட்டத்திலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி விட்டுக்கொடுக்காது. நம்முடைய பெருமை மற்றும் உரிமைகளுக்காக திமுக ஆட்சி தொடர்ந்து போராடும். தமிழகத்தை யாரும் பிரிக்க முடியாது.
அந்தக் கனவு எல்லாம் நிறைவேறாது ஆகையால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அரசியல் சட்டத்தில் மத்திய அரசினை ஒன்றிய அரசு என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் ஒன்றிய அரசு என்று கூறுவது தவறு இல்லை. நாட்டுக்கு எதிரானது ஒன்றுமில்லை. தமிழகம் பாதுகாப்பான ஆட்சியின் கீழ் இன்று இருக்கிறது. ஆகையால் தமிழகத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றார்.