நெல்லை- சென்னை வந்தேபாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை தேவை

முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி தொகுதி எம்எல்ஏ கடம்பூர் ராஜூ தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்

Update: 2023-09-22 12:34 GMT

தெற்கு ரயில்வே பொதுமேலாளரிடம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ மனு அளித்தார்.

மேக் இன் இந்தியா (Make in India) திட்டத்தின்படி இந்திய நகரங்களுக்கிடேயே பயணிக்கும் அதிவேக ரயில் "வந்தே பாரத்" ஆகும். தமிழ்நாட்டில் உள்ள ஐசிஎஃப்ல் (Integral Coach Factory - ICF) தயாரிக்கப்பட்டது "வந்தே பாரத்" ரயில் என்பது தமிழர்களுக்கு கூடுதல் பெருமை. மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்த "வந்தே பாரத்" ரயிலில் பயணிப்பதன் மூலமாக பயணிகள் தங்களது நேரத்தை மிச்சப்படுத்தலாம் அதோடு விமானத்தில் உள்ளதைப் போன்று குளிர்சாதன வசதி, கழிவறை வசதி, ஒலிபெருக்கி வசதி, கண்காணிப்பு கேமரா வசதி என பல்வேறு வசதிகளையும் அனுபவிக்கலாம்.

ஏற்கெனவே பல வட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் "வந்தே பாரத்" ரயில் தற்போது சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை வந்து செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. நீல நிறத்திலுள்ள இந்த அதிவேக "வந்தே பாரத்" ரயில் எட்டு பெட்டிகளைக் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து தினமும் அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 1:50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. சென்னை எழும்பூரில் இருந்து தினமும் மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 10:40 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

சென்னை எழும்பூர்- நெல்லை இடையே இயக்கப்படும் "வந்தே பாரத்" ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய இடங்களில் நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் மதுரை மற்றும் திருநெல்வேலி நிலையங்களுக்கு அடுத்து அதிக லாபம் ஈட்டும் நிலையங்களில் மூன்றாவதாக கோவில்பட்டி ரயில் நிலையம் உள்ளதாகவும், தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியைச் சேர்ந்த கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், கயத்தாறு பகுதி மக்களுக்கு இந்த ரயில் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட தென்னக ரயில்வே மேலாளர் பரிசீலித்து ஆவண செய்வதாக தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே, மதிமுக மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் சென்னை - நெல்லை இடையே‌ இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி 25 ஆம் தேதி மாலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் கோவில்பட்டி ரயில்வே நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News