கோவில்பட்டியில் இரு மகள்களுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை
கோவில்பட்டியில் ராஜீவ் நகரில் முத்துமாரி அவரது இரு மகள்கள் மர்மான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜீவ் நகர் 3வது தெருவைச் சேர்ந்த முத்துராமன் என்பவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதியினருக்கு யுவராணி(21), நித்யா(17) என்ற 2 பெண் குழந்தைகள். யுவராணி கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். நித்யா தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு முத்துமாரி தனது கணவர் முத்துராமனை பிரிந்து தனது 2 பெண்குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். முத்துமாரி கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் முத்துமாரிக்கும், அவரது சகோதரர் ஆண்டவர் என்பவருக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது. இது குறித்து முத்துமாரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முத்துமாரி குடும்பத்திற்கு அவரது சகோதரர் ஆண்டவர் அடிக்கடி சொத்து பிரச்சினை தொடர்பாக தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலையில் முத்துமாரியின் தாய் கோமதி, வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. மேலும் அதிகளவில் துர்நாற்றம் வீசியதால், அருகில் இருந்தவர்களிடம் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது வீட்டின் முன்பகுதியில் யுவராணி, நித்யா ஆகியோர் தூக்கி தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் நித்யாவின் கால் கீழ் பகுதியில் ஆடை இல்லமால் இருந்துள்ளது. வீட்டின் சமையல் அறை பகுதியில் முத்துமாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததை பார்த்த போது, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியன் மற்றும் போலீசார் விரைந்து 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்துப்பிரச்சினை காரணமாக 3பேரும் கொலை செய்யப்பட்டார்களாக அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் மற்றும் இரு மகள்கள் மர்மான முறையில் தூக்கி தொங்கிய நிலையில் சடலமாக கிடந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.