பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வம்புக்கு இழுக்கும் துரை வைகோ...
மங்களூரு குண்டு வெடிப்பு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாய் திறக்காதது ஏன்? என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வில்லிச்சேரி கிராமத்தில் அந்தப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக பொதுத்துறை வங்கியை நிறுவ வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து, மத்திய நிதியமைச்சரிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி.யும் கோரிக்கை மனுவை அளித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் வில்லிச்சேரி கிராமத்தில் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கி அமைக்கப்பட்டு செயல்பட உள்ளது. அதற்கான முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியன் வங்கி அமைக்கப்பட உள்ள நிலையத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனும், மதிமுக தலைமை நிலையச் செயலாளருமான துரை வைகோ நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தலைமை தேர்தல் அதிகாரி, மாநில ஆளுநர் தனிப்பட்ட அரசியல் கட்சி சித்தாந்தங்களுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டனத்திற்குரியது என்பதை நீதிமன்றமே கூறி உள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காவல்துறையின் கவனக்குறைவு காரணமாகவும், தமிழக அரசின் காவல் துறையும் சரியாக செயல்படாததால் குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.
இதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்துள்ளது. அந்த சம்பவம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர் ஏற்கெனவே ஷிமோகா என்ற இடத்தில் ஒத்திகை பார்த்துள்ளார்.
பெங்களூருவில் 2020 ஆம் ஆண்டு கலவரத்தின் போது ஈடுபட்டு இருக்கிறார் என்றும் இரண்டு வருடமாக இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பாஜக ஆளுகின்ற கர்நாடகா அரசு கண்டு கொள்ளவில்லை.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பந்தமாக தமிழக அரசை பார்த்து குற்றச்சாட்டு கூறும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்நாடகாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்ந்தமாக ஏன் வாய்திறக்க வில்லை என தெரியவில்லை. தமிழக அரசுக்கு ஒரு நியாயம், கர்நாடகா அரசுக்கு ஒரு நியாயமா? என்பதை அண்ணாமலை தான் விளக்க வேண்டும்.
குஜராத்தில் தொங்கு பாலம் விபத்தில் 140 பேர் இறந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர். அந்த சம்பவம் குறித்து இதுவரை ஒரு எப்ஐஆர் கூட பதிவு செய்யப்படவில்லை என குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அங்குள்ள பாஜக அரசின் மாநகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவாக பாலம் விபத்து நடந்துள்ளது என கூறுகின்றனர். இதை எப்படி எடுத்துக் கொள்ள என மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.