கோவில்பட்டியில் மாசில்லா பசுமை வழி விநாயகர் சதூர்த்தி விழிப்புணர்வு பேரணி
கோவில்பட்டியில் மாசில்லா பசுமை வழி விநாயகர் சதூர்த்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாடு முழுவதும் செப்டம்பர் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த கோரியும், விநாயகர் சிலைகளை களிமண், அரிசிமாவு போன்ற இயற்கை சார்ந்த பொருட்களை கொண்டு செய்திடவும், நீர் நிலைகளை சுத்தமாக வைத்திடவும், மாசில்லாமல் பசுமை வழியில் விநாயகரை வழிபட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்திட வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, கோவில்பட்டி கல்வி மாவட்ட தேசிய பசுமை படை ஆகியவை சார்பில், மாசில்லா பசுமை வழி விநாயகர் சதுர்த்தி விழிப்புணர்வு பேரணி இந்திரா நகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் வைத்து நடந்தது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில், பேருந்து நிலையம், ரயில் நிலையம், கிருஷ்ணன்கோவில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, இந்திராநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்டோ வாகன விழிப்புணர்வு பிரச்சாரமும். கோவில் பக்தர்களுக்கு துணிப்பை வழங்கியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்திராநகர் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு பேரணிக்கு தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் தலைமை வகித்தார். அரசு மகளிர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், தாய்கோ வாங்கி முன்னாள் மேலாளர் ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு பேரணியை கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கல்லூரி துணை முதல்வர் தமயந்தி, ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரி,பள்ளி மாணவிகள் மாசில்லா பசுமை வழி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நகரின் முக்கிய பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் ரவீந்திரன், செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, ரோட்டரி சங்க உறுப்பினர் நடராஜன், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பசுமை படை ஆசிரியர் சுப்பிரமணியன், கே.ஆர் கல்வி நிறுவனங்களின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.