தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை; அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியில்லை என கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலத்தில் தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கிழக்கு ஒன்றியத்தில் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனை கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று சொன்னார்கள். ஆனால், தமிழகத்தில் இன்றைக்கு சட்ட ஒழுங்கு அந்த அளவுக்கு கெட்டுப்போய் விட்டது. நாட்டில் மக்களுக்காக மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னார்கள். எந்த மதுக்கடையை மூடி இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரு காலத்தில் மதுக்கடை வருமானம் முழுவதுமாக தமிழக அரசாங்கத்துக்கு வந்தது. இன்றைக்கு மதுபான கடைகள் மூலம் வந்த வருமானம் எல்லாம் முதல்வர் குடும்பத்துக்கு செல்கிறது. அதை வசூலித்து கொடுத்தவர் சிறையில் உள்ளார். இந்திய அரசியலிலே ஓர் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் இன்றைக்கு ஜெயிலில் இருப்பது தமிழ்நாட்டிற்கு தலைக்குனிவு ஆகும்.
தேர்தல் வாக்குறுதி எல்லாம் நிறைவேற்றுவேன் என்று சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததால், மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஸ்டாலின் தான் வாராரு விடியல் தரப் போறாரு என பிரசாரம் செய்தார்கள். ஆனால், இன்று திமுக குடும்பத்துக்கு மட்டுமே விடிந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துக்கு மட்டும் தான் விடிந்துள்ளது என, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் நீலகண்டன், இளைஞர் அணி அருண், நகர மன்ற உறுப்பினர் கவியரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.