கோவில்பட்டியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல்.. போக்குவரத்து பாதிப்பு...
கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து வியாபாரிகள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பசுவந்தனை நெடுஞ்சாலை மற்றும் நகரின் மையப் பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகள் இருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது அந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
இந்தநிலையில், பசுவந்தனை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரஹமத் தலைமையில் ஜேசிபி இயந்திரங்களுடன் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் இன்று ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, வணிகர்களுக்கு முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படாமல் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கடையின் முகப்புகளை சேதப்படுத்துவதாகவும் இதனால் வணிகம் பாதிக்கபடுவதாகவும் கூறி வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு முன்னறிவிப்பு செய்த பின்னர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என போலீஸார் சமரசம் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். வியாபாரிகளின் மறியல் போராட்டம் காரணமாக கோவில்பட்டி-பசுவந்தனை நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.