தமிழக ஹாக்கி, ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி மாணவர்கள் தேர்வு
தமிழ்நாடு ஹாக்கி மற்றும் ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.;
தமிழ்நாடு ஹாக்கி மற்றும் ஹேண்ட்பால் அணிகளுக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில், இந்திய தேசிய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் நடத்தும் மாநிலங்களுக்கு இடையேயான போட்டிகளில் கலந்து கொள்ளும் 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹாக்கி அணியின் தேர்வு தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது. அதே போல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு ஹேண்ட்பால் அணிக்கான வீரர்கள் தேர்வு நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டதில் நடைபெற்ற 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹாக்கி அணிக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் நவிநேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டார். 17 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு அணி மகராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட தமிழ்நாடு ஹேண்ட்பால் அணியின் தேர்வில் மாணவர் மணிகண்டன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த தமிழ்நாடு ஹெண்ட்பால் அணி அரியானாவில் நடைபெறும் தேசிய அளவிலான ஹேண்ட்பால் போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.
தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் நவிநேஸ்வரன், மணிகண்டன் ஆகியோரையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் முத்துகுமார், உடற்கல்வி ஆசிரியர்கள் சசிக்குமார், சுந்தரராஜன், மகேஸ்வரி, ராமலட்சுமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர், ஆசிரியர்களுக்கு நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிச்செல்வம், உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், கோவில்பட்டி நாடார் பள்ளி செயலாளர் ரமேஷ், தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.