கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனித் தேரோட்டம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-13 09:35 GMT

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

விழாவின் 7 ஆவது நாளான நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முதல் காலமான ஸ்ரீநடராஜர் சிவப்பு சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளல், இரவு 11 மணிக்கு 2 ஆவது காலமான வெள்ளை சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளல் ஆகியவை நடந்தது. 8 ஆம் நாளான நேற்று காலை 9.30 மணிக்கு 3 ஆவது காலமாக ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி பச்சை சார்த்தி எழுந்தருளி ரதவீதிகளை சுற்றி வந்து கோயிலுக்கு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில் ஸ்ரீபிச்சாடநாதர் புறப்பாடும், குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் பரிவேட்டைக்கு புறப்பாடும் நடந்தது.

9-ஆம் நாளான இன்று (13 ஆம் தேதி) காலை 7 மணிக்கு மேல் ரதாரோகணமும், 9.15 மணிக்கு மேல் தேர்வடம் பிடித்தலும் நடைபெற்றது. முதலில் சுவாமி தேரும், அதனை தொடர்ந்து அம்பாள் தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சுமார் 1.30 மணிக்கு தேர்கள் நிலையை வந்தடைந்தன.

நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. தேரோட்ட நிகழ்ச்சியில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, நகர மன்ற தலைவர் கருணாநிதி, அரசியல் பிரமுகர்கள் தொழில் அதிபர்கள், மற்றும் கோவில்பட்டி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags:    

Similar News