ஹெச். ராஜாவுக்கு எதிர்ப்பு: கோவில்பட்டியில் கறுப்புக் கொடியுடன் திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

கோவில்பட்டியில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெ. ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடியுடன் திரண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2023-03-21 15:02 GMT

கோவில்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் ஹெச். ராஜா. இவர், அதிரடியான பல கருத்துகளை தெரிவித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு. மேலும், எதிர்கட்சியினரை கடுமையான வார்த்தைகளிலும் விமர்சம் செய்வதை வாடிக்கையாக கொண்டு உள்ளார் ஹெ. ராஜா.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்தும், அக்கட்சியின் நிர்வாகிகள் குறித்தும் ஹெச். ராஜா தொடர்ந்து தவறான கருத்துகளை தெரிவித்து வருவதாகவும், அவர் செல்லும் இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களை எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில், மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் இன்று இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா, கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிலையில், ஹெச். ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில் வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் முன்னிலையில் ஏராளமானோர் கறுப்பு கொடியுடன் மந்தித்தோப்பு சாலை சந்திப்பில் திரண்டனர்.

இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தொல் .திருமாவளவன் எம்.பி. பற்றி அவதூறாக பேசி வரும் ஹெச். ராஜா கோவில்பட்டி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூடாது என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார் போராட்டத்தில் ஈடுபட திரண்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

Tags:    

Similar News