கோவில்பட்டியில் நகராட்சி பொறியாளரை வாகனத்துடன் சிறைபிடித்த பொதுமக்கள்...

கோவில்பட்டியில் நகராட்சி பொறியாளரை வாகனத்துடன் சிறைப்பிடித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-25 14:22 GMT

கோவில்பட்டியில் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட நகராட்சி பொறியாளர் வாகனம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி வளர்ந்து வரும் பகுதி ஆகும். இந்த நகராட்சியில் நாளுக்குநாள் மக்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நகராட்சி நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவில்பட்டி நகராட்சிக்குட்பட்ட 5 ஆவது வார்டு பகுதியான வேலாயுதபுரத்தில் 2 ஆவது குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்று அந்தப் பகுதி தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, நகராட்சி பொறியாளர் ரமேஷ் குடிநீர் பிரச்னை குறித்து வேலாயுதபுரம் பகுதியில் ஆய்வு செய்துள்ளார்.


அப்போது, 2 ஆவது குடிநீர் திட்டத்தில் இருந்து வழங்கப்படும் குடிநீர் சரியாக வரவில்லை என்றும் குறைவாக தான் வருவதாகவும் அவரிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே, முதலாவது குடிநீர் திட்ட குழாய்கள் மூலமாக தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்று அந்த வார்டு கவுன்சிலர் லவராஜா மற்றும் பொது மக்கள் தெரிவித்து உள்ளனர்.

அப்போது, நகராட்சி பொறியாளர் ரமேஷ் அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. மேலும் கவுன்சிலரை பார்த்து நீ யார்? என்ற கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பொது மக்கள் கவுன்சிலர் லவராஜா தலைமையில் பொறியாளர் வாகனத்தினை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அது மட்டுமின்றி பொறியாளருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

வேலாயுதபுரம் பகுதி மக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாரும், நகராட்சி அதிகாரிகளும் உறுதியளித்தைத் தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News