அடுப்பில்லா சமையல் உணவுகளை செய்து அசத்திய கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகள்
கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து வார விழாவில், அடுப்பில்லா சமையல் உணவுகளை செய்து மாணவிகள் அசத்தினர்.;
ஆரோக்கியமான வாழ்விற்கு ஊட்டச்சத்தின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கோவில்பட்டி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது.
இதில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் மனையியல், சத்துணவியல் பிரிவு மாணவிகள் அடுப்பில்லா சமையல் உணவு வகைகளான அவல் தயிர் சாதம், சத்து பானகங்கள், பஞ்சாமிர்தம், பொரிகடலை உருண்டை, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை, வெஜி சாலட், ஜூஸ் வகைகள், அறுசுவை உணவு வகைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை கொண்டு வந்து அசத்தினர்.
பின்பு 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கையில் பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பி பேரணியாக பள்ளி முன்பிருந்து துவங்கி எட்டயபுரம் ரோடு, ரதவீதி வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமையாசிரியை ஜெயலதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியை உஷா ஷோஸ்பின் அனைவரையும் வரவேற்றார்.
குழந்தை வளர்ச்சி திட்டஅலுவலர் தாஜு நிஷா பேகம் கலந்துகொண்டு அடுப்பில்லா சமையல் உணவு வகைகளை பார்வையிட்டு போஷன் அபியான் குறித்து சிறப்புரையாற்றினார். இதில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் முத்துமாரி,போஷன் அபியான் வட்டார ஒருங்கிணைப்பாளர் நிவேதா, சத்துணவியல்ஆசிரியர் அன்ன மரியாள்,உள்பட ஆசிரியர்கள்,மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.