கோவில்பட்டியில் பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை

கோவில்பட்டியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-03-23 13:20 GMT

பாஜக மாநில பட்டியல் பிரிவு பொதுச் செயலாளர் சிவந்தி நாராயணன் வீட்டில் திரண்ட பாஜகவினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ராஜூவ் நகர் 6 ஆவது தெருவில் வசிப்பவர் சிவந்தி நாராயணன். இவர், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பட்டியல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளார். சிவந்தி நாராயணன் வெளியூர் சென்றிருந்த நிலையில், இன்று காலை அமலாக்கத் துறையினர் என கூறிக் கொண்டு அதிகாரிகள் சிலர் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

முறைகேடான பண பரிவர்த்தனை தொடர்பான வழக்கு ஒன்றில் சிவந்தி நாராயணனுக்கு தொடர்பு ஏதும் உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனை குறித்த தகவல் பரவியதும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் பலர் சிவந்தி நாராயணனின் வீடு முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதற்கிடையே, வெளியூரில் இருந்த சிவந்தி நாராயணன் வீடு திரும்பியதால் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமலாக்க பிரிவு அதிகாரிகளான ஒரு பெண் உட்பட மூன்று அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் சிலரும் சுமார் 6 மணி நேரமாக நடத்தினர்.

மேலும், இந்த சோதனையின்போது கட்டுமான ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சிவந்தி நாராயணனை கோவில்பட்டி ஏ.கே.எஸ். தியேட்டர் சாலையில் உள்ள அவரது ஸ்ரீ சிவந்தி எண்டர்பிரைசஸ் நிறுவன அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கும் சோதனை நடத்தினர்.

பாஜக மாநில நிர்வாகி ஒருவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீரென சோதனை நடத்தியது தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், சோதனைக்கான முழுமையான காரணம் எதையும் அமலாக்கத்துறையினர் தெரிவிக்கவில்லை.

இதுதொடர்பாக, பாஜக நிர்வாகி சிவந்தி நாராயணன் கூறும்போது, தான் அரசு ஒப்பந்தம் ஏதும் எடுத்து செய்யவில்லை என்றும் தனியார் ஒப்பந்தம் மட்டுமே செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News