கி. ராஜநாராயணனுக்கு கோவில்பட்டியில் ரூ. 1.50 கோடியில் நினைவு மண்டபம்.. பொதுப்பணித்துறை செயலாளர் ஆய்வு..

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணன் நினைவு மண்டப பணிகளை பொதுப்பணித் துறை செயலார் மணிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2022-11-10 16:32 GMT

நினைவு மண்டபத்தில் பொதுப்பணித் துறை செயலாளர் மணிவாசன் ஆய்வு மேற்கொண்டார்.

"கரிசல் காட்டு இலக்கியத்தின்" முன்னோடி என அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ரா. என்கிற கி. ராஜநாராயணன் படைப்புகளில் கரிசல் நிலவியலும், வெள்ளந்தித் தனமும், பேரன்பும் மிக்க மக்களின் வாழ்வும் சாகாவரம் பெற்றன. அந்த மண்ணின் உழைப்பாளிகள், விவசாயிகள், பிஞ்சுக்குழந்தைகள், கதவு மற்றும் நாற்காலிகள் கூட அவரின் கதை மாந்தர்களாக மாறி மாயம் நிகழ்த்தின.

கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கி. ராஜாநாராயணன் இலக்கிய பணியை செய்துள்ளார். 1991 ஆம் ஆண்டு "கோபல்லபுரத்து மக்கள்" என்ற நாவலுக்கு "சாகித்ய அகாடமி விருது" பெற்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. எழுத்தாளர் கி. ராஜநாராயணன் கடந்த ஆண்டு மே மாதம் 17 ஆம் தேதி தனது 99 ஆவது வயதில் புதுச்சேரியில் வைத்து இயற்கை எய்தினார்.

இதன் தொடர்ச்சிாயக, வட்டார பேச்சு வழக்கை, அதற்குரிய உயரிய இடத்தை தமிழ் இலக்கிய வரலாற்றில் பறைசாற்றிய கி. ராஜாநாராயணனுக்கு அவர் பிறந்த ஊரான கோவில்பட்டியில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் கோவில்பட்டியில் ரூ. 1. 50 கோடி மதிப்பில் கரிசல் இலக்கியத்தின் தந்தை மறைந்த எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், எழுத்தாளர் கி. ராஜநாராயணன் படித்த பள்ளி எவ்வாறு இருந்ததோ அதே அடிப்படையில் பழைமை மாறாமல் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. அந்தப் பள்ளியை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்.

இந்நிலையில், கி. ராஜநாராயணன் நினைவு மண்டபம் அமைக்கும் பணிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் தமிழக அரசின் பொதுப்பணித் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் இன்று ஆய்வு செய்தார். மேலும், கட்டுமானப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

மேலும், மணிமண்டப தரைத்தளத்தில் டிஜிட்டல் நூலகம், நிர்வாக அறை, நூலகம், கற்சிலை, கண்காட்சி மற்றும் அனுபவ அறைகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுப்பணித் துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து கோரம்பள்ளம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலர் மரு.கே.மணிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அருணாச்சலம், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலெட்சுமி, கட்டடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் தம்புரான் தோழன், உதவி செயற்பொறியாளர்கள் கங்கா பரமேஸ்வரி, பரமசிவம், சுஜாதா, கோவில்பட்டி வட்டாட்சியர் சசீலா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News