பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான வீரருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு
பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் மகாராஜாவை சந்தித்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்தார்.;
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வட்டம் கே. துரைசாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த 24 வயதான மகாராஜா பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஆகஸ்ட் 18 ம் தேதி முதல் ஆகஸ்ட் 27 ம் தேதி வரை இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் நடைபெறும் IBSA (சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு) உலக விளையாட்டு 2023 இல் மகாராஜா பங்கேற்கிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்ப நாயக்கன்பட்டியில் நடைபெற்ற "மக்கள் களம்" நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.
இதையடுத்து, கனிமொழி எம்.பியை சந்தித்த பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் மகாராஜா. தூத்துக்குடி மாவட்டம் எப்பொழுதும் வென்றான் அருகில் உள்ள கே. துரைசாமிபுரம் தனது சொந்த ஊர் என்று தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 முதல் 27 வரை பர்மிங்காமில் நடைபெறும் IBSA (சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு) உலக விளையாட்டு 2023-இல் விளையாட, இந்தியா அணி 17 நபர்களில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரர் என்று தன்னை மகாராஜா, கனிமொழி எம்.பி.யிடம் அறிமுகப் படுத்திக்கொண்டார். மகாராஜாவிடம் இருந்து மனுவைப் பெற்றுக் கொண்டு,அதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த கனிமொழி எம்.பி. கிரிக்கெட் வீரர் மகாராஜாவுக்கு ஊக்கத் தொகை அளித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.