கோவில்பட்டி பகுதியில் சேதமடைந்த மக்காச்சோளம் பயிர்கள்.. இழப்பீடு வழங்க கடம்பூர் ராஜூ எம்எல்ஏ வலியுறுத்தல்..
கோவில்பட்டி அருகே சூறைக்காற்றால் மக்காச்சோளம் பயிர்கள் சேதமடைந்து உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கடம்பூர் ராஜூ எம்எல்ஏ வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள வில்லிசேரி பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த மக்காச்சோளம் பயிர்கள் மற்றும் பருத்தி பயிர்கள் சூறைக்காற்றால் சேதம் அடைந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களையும், சேதமடைந்த விளை நிலங்களை முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ இன்று நேரில் பார்வையிட்டார். மேலும், பயிர்களை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
ஆய்வின்போது, வேளாண்மை துறை இணை இயக்குநர் முகைதீன், வேளாண்மை துறை நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வட்டாட்சியர் சுசீலா, வேளாண்மை அலுவலர் காயத்ரி, வேளாண்மை உதவி இயக்குநர் நாகராஜ், வேளாண்மை உதவி அலுவலர் செல்வராஜ், வில்லிச்சேரி தலைவர் வேலன், துணைத் தலைவர் காசிராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி ,ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் கிருபாகரன், நகராட்சி கவுன்சிலர் கவியரசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, கடம்பூர் ராஜூ எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. அந்தப் பகுதிகளில் விவசாயிகள் பருவ நிலைக்கு ஏற்றால் போல் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
தென் மாவட்டங்களில் அதிக அளவு மக்காச்சோளம் பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 50,000 ஹெக்டேர் அளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. வில்லிசேரி பகுதிகளில் மக்காசோளம் அதிகமாக பயிரிடப்பட்டு உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக 300 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கலை அதிகாரிகள் குழுவினர் உடனடியாக பார்வையிட்டதை நான் வரவேற்கிறேன்.
பயிர்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன். அதேபோல் பருத்தியில் தண்டு புழு தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் அதில் ஏற்படும் சேதத்தையும் கணக்கிட்டு அதற்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
மழைநீர் வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே குடி மராமத்து திட்டத்தை முந்தைய அதிமுக அரசு கொண்டு வந்தது. அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, அதை கருத்தில் கொண்டு முந்தைய திட்டத்தை தற்போதைய அரசும் கொண்டு வர வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை எல்லாம் தற்போதைய திமுக ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணங்களால் நிறுத்தப்பட்டு உள்ளது என கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.