பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

கோவில்பட்டியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-11-25 14:53 GMT

கோவில்பட்டியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர். பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.

1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூர்வதற்காகவும், பெண்களுக்கு வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தேர்வு செய்யப்பட்டது. அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி முடிவடையும்.

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்விற்கு, கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மேரிஷீலா முன்னிலை வகித்தார். முனைவர் சம்பத்குமார் மற்றும் வழக்கறிஞர் ரவிக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிகழ்வில், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்களின், நிர்வாகி சுபேதார் கருப்பசாமி, ஒய்எம்சிஏ அமைப்பின் ஆர்ம்ஸ்டார்ங்க், ஷீலா ஜாஸ்மின், மக்கள் நீதி மய்யம் கட்சியின் ராதாகிருஷ்ணன், ரமேஷ், பகத்சிங் இரத்ததான அறக்கட்டளையின் காளிதாஸ், லட்சுமணன், ஐஎன்டியுசி ராஜசேகரன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாடசாமி, தமிழ்நாடு காமராஜர் பேரவையின் நாஞ்சில் குமார், தர்மம் வெல்லும் அறக்கட்டளையின் பூலோகப்பாண்டியன், இரட்டைமலை சீனிவாசனார் இயக்கம் செல்வகுமார், வேம்பு மக்கள் சக்தி இயக்கத்தின் தேவராஜ், சுபத்ரா, மற்றும் தமிழ்நாடு பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News