கோவில்பட்டி பகுதியில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
கோவில்பட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வலியுறுத்தினார்.;
கோவில்பட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கன மழையின் காரணமாக கழுகுமலை அருகேயுள்ள காலங்காரைப்பட்டி, ராமலிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சுமார் 5000 ஏக்கர் அளவில் பயிரிட்ட இருந்த மக்காச்சோள பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.
ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து இருந்த நிலையில் பலத்த மழையின் காரணமாக மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்துவிட்டதாகவும், தமிழக அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜூ பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களை இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
பின்னர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
வறட்சி மற்றும் மழையின் காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டால் அ.தி.மு.க. ஆட்சியில் உடனடியாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு வில்லிசேரியில் இதே போன்று பலத்த மழைக்கு பயிர்கள் பாதிக்கப்பட்டது. அப்போது விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.
ஆனால், தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்பொழுது சில தினங்களாக பெய்த மழைக்கு கழுகுமலை, பெரியசாமிபுரம், உசிலங்குளம் பகுதியில் மக்காச்சோளம், உளுந்து, பாசி, நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
அவற்றை உரிய கணக்கிடு செய்து விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிப்புகள் குறித்தும், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்கவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி மிகப்பெரிய அளவில் பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். தி.மு.க. அரசு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்று கூறினாலும், அது வெறும் கண்துடைப்பாக தான் உள்ளது.
இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.