கோவில்பட்டியில் பேருந்து நிலையங்களிடையே பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
கோவில்பட்டியில் அண்ணா பேருந்து நிலையத்துக்கும் கூடுதல் பேருந்து நிலையம் இடையே பேருந்து இயக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்துக்கு போதிய சர்வீஸ் பேருந்து இல்லை என பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், பல்வேறு சமூக அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு சர்க்குலர் பஸ் இயக்கப்பட வேண்டும் என அரசு போக்குவரத்து பணிமனை மேலாளர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவில்பட்டி நகர குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:
திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரவு முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், கோவில்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்வதற்கு இயக்கப்பட்டு வந்த சர்க்குலர் பஸ் தற்போது இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் சர்குலர் பஸ் இயக்கப்பட வேண்டும். மேலும், கோவில்பட்டியில் முக்கியமாக மக்கள் செல்லும் பகுதிகளுக்கும் பேருந்து வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனு அளிக்கும் நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் தினேஷ், கிளைச் செயலாளர்கள் மற்றும் சிஐடியு தொழிற்சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.