கோவில்பட்டியில் ரூ. 1.83 கோடி மதிப்பில் பொலிவு பெறும் அரசு மகளிர் பள்ளி
கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.83 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தமிழக அரசின் தகை சால் பள்ளி திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஏற்கெனவே, அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், பழுதடைந்த நிலைகளில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்களை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ், ரூ. 1.83 கோடி மதிப்பில் தமிழக காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் பள்ளி கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்போது, கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பொலிவு பெறும் பள்ளியாக மாற இருக்கிறது. தரைதளங்கள், மேல்தளங்கள், ஆய்வுகூடங்கள், வகுப்பறைகள், புதுப்பிக்கபடுகின்றன. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கட்டுமானப் பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியர்கள் உஷா ஜோஸ்பின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியர் கண்ணன் வரவேற்றார்.
தமிழக காவல் வீட்டு வசதி கழக செயற்பொறியாளர் கட்டிட புதுப்பித்தல் பணியினை துவக்கி வைத்து பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உதவி செயற்பொறியாளர் குமரேசன், இளநிலை பொறியாளர் காட்வின், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் முத்து முருகன், ஒப்பந்தக்காரர் ராஜகோபால், உதவி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குநர் காளிராஜ் உள்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.