கோவில்பட்டி பகுதியில் கனமழை: 5 ஆயிரம் ஏக்கர் மக்காசோள பயிர்கள் சேதம்

கோவில்பட்டி பகுதிகளில் கனமழை காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தன.;

Update: 2023-11-23 13:30 GMT

மழையில் சேதமடைந்த மக்களாசோள பயிர்களுடன் விவசாயிகள்.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கழுகுமலை, கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.

காற்று மற்றும் கன மழையின் காரணமாக கழுகுமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5000 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் வேரோடு நிலத்தில் சாய்ந்து முற்றிலும் சேதம் அடைந்துள்ளன. இதனைக் கண்ட விவசாயிகள் கண் கலங்கி நின்று தங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிட்டது என்றும் எப்படி இதில் இருந்து மீள போகிறோம் என தெரியாமல்பெரும் துயரத்திற்கு உள்ளாகி உள்ளனர்.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:-

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு உள்ளன. கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, உள்ளிட்ட கடந்த இரண்டு வருடங்களாக சரிவர விளைச்சல் இல்லாத காரணத்தினாலும் அதிகாரிகள் பயிர் இழப்பீடு தொடர்பாக அரசுக்கு உரிய அறிக்கையை தாக்கல் செய்யாத காரணத்தினாலும் தங்களால் பயிர் காப்பீடு இழப்பீடு தொகையை பெற முடியவில்லை.

இருந்த போதிலும் இந்த ஆண்டு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு கடன் பெற்று மக்காச்சோளம் பயிரை பயிரிட்டு உள்ளோம். தற்போது நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக பயிர்கள் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க பெற வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News