தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள மந்திதோப்பு கிராமத்தில் உள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் குப்பை கொட்டப்படுவதால் கண்மாயில் உள்ள தண்ணீர் மாசு அடையும் நிலை ஏற்படும் அபாயம் இருப்பதால் பொது மக்கள் லாரிகளை சிறைப்பிடித்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு கிராமத்தில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலமாக அப்பகுதியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கண்மாயின் ஒரு பகுதி அருகே கோவில்பட்டி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து குப்பைக் கழிவுகள், மருந்து கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுப் பொருள்களை லாரிகளில் ஏற்றி வந்து கடந்த சில நாள்களாக கொட்டி வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் லாரி ஓட்டுநரிடம் தெரிவித்தும், எவ்வித பலனும் கிடைக்காததையடுத்து குப்பைக் கழிவுகளை கொட்ட வந்த லாரி மற்றும் ஜேசிபி-யை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
குப்பை கழிவுகளை கண்மாயில் கொட்டுவதால் இக்கிராம மக்களுக்கு நீராதாரம் பாதிக்கப்படுவதோடு மட்டுமின்றி கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு இப்பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனால், இப்பகுதி பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்தவுடன் லாரியின் ஒப்பந்தகாரர் சம்பவ இடத்திற்குச் சென்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இங்கு கொட்டி வந்த குப்பைகள் உடனடியாக அகற்றப்படும் எனக் கூறியதையடுத்து, போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர். அதையடுத்து ஒப்பந்தகாரர் முன்னிலையில் ஜேசிபி உதவியுடன் அங்கிருக்கும் குப்பைக் கழிவுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.