அதிமுக அரசின் திட்டத்திற்கு புதிய பெயர் வைக்கும் திமுக அரசு.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி..

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்திற்கு புதிய பெயர் வைத்து திமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2022-12-06 11:05 GMT

அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு, அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, கடம்பூர் ராஜூ எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தின்போது, திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாநில எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் தேவேந்திரன், நகர செயலாளர் விஜய பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பன், மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, காந்தி என்ற காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ செய்தியாளரிடம் கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளான நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 உதவித் தொகை வழங்கல், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல் போன்ற எந்த வாக்குறுதியையும் திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பால்விலை உயர்வு உள்ளிட்ட மக்களின் உணர்வுகளை ஆதரித்து மக்களின் உணர்வாக பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் காலூன்ற எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்து உள்ளார்.

கூட்டணி கட்சிக்கு ஏற்றவாறும், காலத்திற்கு ஏற்றபடியும் கம்யூனிஸ்ட் கட்சி பேசி வருகிறது. கம்யூனிஸ்ட் நடத்த வேண்டிய போராட்டத்தை அதிமுக நடத்திக் கொண்டு இருக்கிறது. கோவை செல்வராஜ் காலாவதியான அரசியல் வாதி. இடையிலே வந்தவர், இடையிலே போய் உள்ளார்.

அதிமுகவுக்கும், திமுகக்குவும் உள்ள வேறுபாடு என்ன என்பதை சொல்லாமல் சொல்லி உள்ளார் ஆர்.எஸ். பாரதி. அடக்கமுடியாத கருத்தை தான் ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார். இது தான் நிதர்சனம். டிடிவி தினகரன் அமமுக வளர்ச்சியை மட்டும் பார்க்கட்டும். அதிமுக வளர்ச்சியை பற்றி அவர் கவலை பட வேண்டியது இல்லை.

தமிழகத்தில் பாஜக தலைமையில் கூட்டணியை சந்திப்போம் என்று ஓபிஎஸ் அணியில் உள்ள வைத்தியலிங்கம் கூறியதில் இருந்தே தெரிகிறது. அவர் அதிமுகவைச் சேர்ந்தவர் கிடையாது என்று. அவர் அதிமுககாரராக இருந்தால் அதிமுக தலைமையில் கூட்டணி என்று சொல்லி இருப்பார்.

கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டம் தொடர்பான பணியை திமுக அரசு புதிய பெயர் வைத்து நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Tags:    

Similar News