கோவில்பட்டியில் நிவாரணம் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்

Farmers Demanded Rain Relief Fund மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-27 13:25 GMT

கோவில்பட்டி மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த பயிர்களை கையில் ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Farmers Demanded Rain Relief Fund

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த வரலாறு காணாத கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டையபுரம் தாலுகாக்களில் பயிரிடப்பட்டிருந்த மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், உளுந்து, பாசி உள்ளிட்ட பயிர்கள் பெரும் சேதமடைந்தன.

சேதமடைந்த பயிர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஏக்கருக்கு 8500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தது. இந்த இழப்பீடு தங்களுக்கு போதுமானதாக இல்லை என கூறி ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இந் நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை பகுதியில் கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது பயிர் செய்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும், ஏக்கருக்கு 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும், தற்போது வரை தங்கள் பகுதிக்கு அதிகாரிகள் யாரும் வந்து இழப்பீடுகளை பார்வை இடவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தி பேசினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் 1௦௦க்கும்  மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

Similar News