கோவில்பட்டி தீக்குச்சி ஆலை தீ விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

கோவில்பட்டி அருகே தீக்குச்சி ஆலையில் உயிரிழந்த மூதாட்டி உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.;

Update: 2023-07-01 06:05 GMT

மூதாட்டி மாரியம்மாள்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சித்தரம்பட்டியில் செயல்பட்டு வந்த அப்பநேரியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கு சொந்தமான தீக்குச்சி தயாரிக்கும் ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கோவில்பட்டி ஊராணி தெருவினை சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் (70) என்பவர் உயிரிழந்தார். கனகராஜேஸ்வரி என்பவர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி மாரியம்மாள் உடல் உடற்கூறாய்வு முடிந்த நிலையில், தீக்குச்சி ஆலையில் பணியின் போது மூதாட்டி மாரியம்மாள் உயிரிழந்த காரணத்தினால் ஆலை நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவ்வாறு இழப்பீடு வழங்கினால் மட்டும் தான் உடலை வாங்குவோம் என்று மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையெடுத்து ஆலை நிர்வாகம் உயிரிழந்த மூதாட்டி குடும்பத்திற்கு 4 லட்ச ரூபாய் மற்றும் இறுதி சடங்கு செய்ய 50 ஆயிரம் என 4 லட்சத்து 50 ஆயிரம் வழங்குவதாக கூறியதை தொடர்ந்து மூதாட்டியின் உடலை வாங்கி செல்ல சம்மதம் தெரிவித்து உடலை பெற்றுச்சென்றனர். இந்த போராட்டம் காரணமா சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதற்கிடையே, தீக்குச்சி ஆலை தீ விபத்தில் உயிரிழந்த மூதாட்டி மாரியம்மாள் குடும்பத்துக்கு ஆறுதல் தெரவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவியையும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சித்திரம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான தீப்பெட்டித் தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் மாரியம்மாள், (70) என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கனகராஜேஸ்வரி (49) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தி உள்ளேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News