திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து பாஜகவை அகற்ற வேண்டும்: துரை வைகோ பேட்டி
திராவிட இயக்கங்கள் ஒன்றிணைந்து பாஜகவை அகற்ற வேண்டும் என கோவில்பட்டியில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்தார்.
திருநெல்வேலி- சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார். பின்னர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்காது என்ற செய்தி கேட்டதும் உடனடியாக மத்திய அமைச்சரிடம் வைகோ பேசினார். மதிமுக சார்பில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார்.
மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று அறிவித்த உடனேயே மத்திய இணையமைச்சர் முருகன் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளார். அதை நாங்கள் வரவேற்கிறோம். இது எங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி.
திராவிட இயக்கங்களான திமுக, மதிமுக, திராவிட கழகம் என அனைத்து திராவிட கழங்களும் ஒன்று சேர்ந்து மதவாத சக்தியான பாஜகவை வேரோடு அகற்ற வேண்டும். இதுதான் என்னுடைய கோரிக்கை. இந்த முடிவை அதிமுக ஏற்றால் நாங்கள் வரவேற்போம் என துரை வைகோ தெரிவித்தார்.