ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம், உங்கள் காலில் விழுகிறேன் - சரத்குமார் உருக்கம்
வாக்கு பணம் வாங்காதீர்கள் என்று உங்கள் அனைவரின் காலை தொட்டு கேட்டுக் கொள்கிறேன் என்று சரத்குமார் உருக்கமாக தெரரிவித்தார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் ஜி.கதிரவனை ஆதரித்து நேற்று கோவில்பட்டி கிருஷ்ணன் கோயில் தெருவில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் பேசினார், அப்போது அவர் பேசியதாவது.
திராவிட இயக்கங்களுக்கு மாறாக ஒரு புதிய மாற்றத்தை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் இணைந்திருக்கின்ற கூட்டணி தான் இந்த கூட்டணி. எளியவருக்கும் வாய்ப்பு, பணமில்லா அரசியல் என்பது தான் எங்களது நோக்கம். பணம் இருப்பவர்கள் தான் தேர்தலில் நிற்க முடியும் என்ற நிலை வந்தால், அது ஜனநாயகமாக இருக்க முடியாது.
இலவசத்தை நாங்கள் எதிர்ப்பவர்கள் அல்ல. யாருக்கு இலவசம் கொடுக்க வேண்டும், எதற்காக கொடுக்க வேண்டும் என்பதை மட்டும் தான் நாங்கள் சொல்கிறோம். மாணவர், மாணவிகள் கல்வி கற்பதற்கு ஏதுவாக கிராமங்கள் தோறும் இலவசமாக வைஃபை வசதி செய்து கொடுக்க வேண்டும், மடிக்கணினி, வைஃபை இணைப்பு, ஸ்மார்ட் போன் ஆகியவற்றை இலவசமாக தருகிறோம் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம்.
இது தான் தேவையான இலவசம். பெண்கள் படித்திருந்தாலும், வீட்டை கவனிக்க வேண்டும் என்பதற்காக வெளியே சென்று வேலை பார்க்க முடியாத நிலை பல வீடுகளில் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தான் படித்த பெண்களுக்கு வீட்டில் இருந்தவாறே சுயதொழில் தொடங்குவதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திறமை இருந்த காரணத்தினால் தான் கிரிக்கெட் வீரர் நடராஜன் வெளியே தெரிந்தார். அதுபோல தான் எங்களிடம் திறமை உள்ளது, வாய்ப்பு கொடுங்கள். உழைத்து முன்னேறுவதற்கு தான் அரசு துணையாக இருக்க வேண்டுமே தவிர, இலவசமாக பணம் கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது.
வாக்குக்கு பணம் மட்டும் வாங்காதீர்கள். அரசியல் கட்சியினர் கொடுக்கும் பணத்தை வாங்காதீர்கள். அதெல்லாம் கொள்ளையடித்த பணம். அதனால் தான் வாக்குக்கு பணம் கொடுக்கிறார்கள். வாக்கு பணம் வாங்காதீர்கள் என்று உங்கள் அனைவரின் காலை தொட்டு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.
இதில், சமத்துவ மக்கள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஆர்.பாஸ்கரன், ஒன்றியச் செயலர்கள் ஆணிமுத்துராஜ், பூல்பாண்டியன், சுரேஷ்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகணேஷ், மகளிரணிச் செயலர் சுதா, மக்கள் நீதி மய்யம் வடக்கு மாவட்ட துணைச் செயலர் கனகசெல்வம் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.