நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறது: முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், நடைபெற்ற முகாமை முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். மேலும், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு அவர் கேடயங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடிகர் விஜயை கண்டு திமுக பயப்படுகிறது. நடிகர்களிடையே அரசு பாரபட்சம் பார்க்கக் கூடாது. அதிமுக ஆட்சி காலத்தில் பாரபட்சம் இல்லை. 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் இருந்தது. திமுக ஆட்சி காலத்தில் திரைத்துறை முடங்கி போய் இருந்தது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் வெளிப்படையான நிர்வாகத்தினால் திரைத்துறை நல்ல முன்னேற்றத்தை பெற்றது. சிறப்பு காட்சி வழங்கிய பின்னர் குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது முறை கிடையாது, தற்போது திரைத்துறை முடங்கி உள்ளதாக அந்தத் துறையைச் சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களை வெளியிட முடியாமல் முடங்கி உள்ளது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கம் தான். நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடத்த பல்வேறு காரணங்களை கூறி அனுமதி தரவில்லை.
ஆனால் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்திற்கு அனுமதி கொடுத்தனர். பாரபட்சமாக பார்க்கப்படும் நிலை திரைத்துறைக்கு நல்லது கிடையாது. திரைத்துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும். எந்த நிலையிலும் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்பவர்கள் திமுகவினர் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ரத்ததான முகாமில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெங்கடேஷ், மோசஸ் பால், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் பழனிச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ்,நகர மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் கடம்பூர் விஜி, பழனி முருகன், பாலாஜி, கோமதி, கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.