நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுமா? அ.தி.மு.க. விடுத்த சவால்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டியிடுமா? என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சவால் விடுத்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 224 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஸ்தூபி மற்றும் மணிமண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, சண்முகநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமானகடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து அதிமுக தான் சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சியாக எடுத்துரைத்து வருகிறது. சட்டமன்ற கூட்டத் தொடரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதை அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பாராட்டி உள்ளனர்.
சட்டமன்றத்தில் பல்வேறு மக்கள் பிரச்னைகள் குறித்து பேசிய நிலையில், அதனை பொறுத்து கொள்ள முடியமால் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை பிரச்னை குறித்து பேசுகின்றனர். இருக்கை பிரச்னை என்பது எங்கள் உரிமை பிரச்னை.
தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்த போது, அவரது இருக்கைக்கு அருகில் துணைத்தலைவர் துரைமுருகனுக்கு இடம் அளிக்கப்பட்டது. தற்போது, எதிர்கட்சி துணைத் தலைவர் உதயக்குமார் தான் என்று சபாநாயகர் கூறிவிட்டு இருக்கை தர மறுக்கிறார்.
நாங்கள் தான் அதிமுக என்று நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மட்டுமின்றி மக்கள் மன்றத்திலும் நிரூபித்து விட்டோம், சட்டமன்றத்தில் நாங்கள் உரிமையை நிலை நாட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். இதை திமுக அரசியல் செய்கிறது.
உண்மை என்ன என்பது மக்களுக்கு தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தனித்து போட்டியிட தயாரா?. திமுக தயார் என்றால் நாங்களும் தயார். ஒரு தலைவனுக்கு தன்னிலை அறிய வேண்டும். அது தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார். யார் எதிர்கட்சி என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக எங்கும் வெற்றி பெறவில்லை. தென்மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச உள்ளார். தமிழகம் முழுவதும் செல்வாக்கு பெற்ற கட்சி அதிமுக என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.