கோவில்பட்டியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கோவில்பட்டியில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரத்திலும் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை வகித்தார்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்புஅலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜ் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விளக்க உரையாற்றினார்.
கூட்டத்தின்போது, குழந்தைகள் பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாத கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்திடவும்,பள்ளி துவங்கும் முன்பும் முடிவுற்ற பின்பும் காவல்துறை மூலம் கண்காணித்திடவும் விவாதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு தலைப்புகளில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வட்டார கல்வி அலுவலர் பாக்கியலட்சுமி, அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி, பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், குழந்தைகள் வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் ராணி விஜயா,தன்னார்வலர் தமிழ்ச்செல்வி, வட்டார மகளிர் திட்ட மேலாளர் சங்கர்,உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சைல்டுலைன் உறுப்பினர் குரு பாரதி நன்றி கூறினார்.