கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவுப்படுத்த அமைச்சரிடம் சிபிஎம் கட்சி வலியுறுத்தல்

கோவில்பட்டி மந்திதோப்பு சாலையை விரிவுபடுத்த வேண்டும் என அமைச்சர் கீதாஜீவனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2023-10-07 14:17 GMT

அமைச்சர் கீதாஜீவனிடம் மனு அளித்த மார்க்சிஸ்ட் கம்யனிஸ்ட் கட்சி நிர்வாகிகள்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட மந்திதோப்பு சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மன்ற உறுப்பினர்கள் சார்பில் 31 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சீனிவாசன் தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார்.

அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவில்பட்டி நகராட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகராட்சி ஆகும். இந்த நகராட்சிக்கு உட்பட்ட 31 ஆவது வார்டில் மந்திதோப்பு பிரதான சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலையை கோவில்பட்டி நகர மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

குறுகிய நிலையில் உள்ள இந்த சாலையை அதிகமான மக்கள் பயன்படுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுவரை நடந்த சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தச் சாலையை விரிவாக்கம் செய்தால் போக்குவரத்து நெரிசல் குறையும். கடந்த கால ஆட்சியில் விரிவாக்க திட்டத்தை கிடப்பில் போட்டதால் இந்த சாலையை விரிவாக்கப்படுத்தக் கோரி இப்பகுதி மக்களும் அரசியல் கட்சிகளும் பல்வேறு இயக்கங்கள் நடத்தியுள்ளனர். இச்சாலையை விரிவுபடுத்த மக்கள் ஆதரவு உள்ளது.

தற்போது நகராட்சி நிர்வாகம் சாலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பி உள்ளது. எனவே, தாங்கள் தலையிட்டு கோவில்பட்டி நகராட்சி உட்பட்ட மந்தித்தோப்பு ரோடு பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் அவர்கள் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Similar News