வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்றுச் செல்ல வலியுறுத்தி சிபிஎம், தேமுதிக போராட்டம்

வந்தே பாரத் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தேமுதிகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-09-23 11:44 GMT

திருநெல்வேலி- சென்னை எழும்பூர் இடையே செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய நிறுத்தங்களில் மட்டுமே நின்றுச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வந்தே பார்த் ரயிலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், திருநெல்வேலி முதல் சென்னை வரையிலான வந்தே பாரத் விரைவு ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அதன் நகரச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் ரயில்வே நிலைய அலுவலகம் முன்பு இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நிலைய அலுவலர்கள் பாலமுருகன், முகேஷ் குமார் ஆகியோரிடம் அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம் கோவில்பட்டி. தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களின் மையப் பகுதியாக கோவில்பட்டி நகரம் அமைந்துள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் வசிக்கும் சுற்று வட்டார 40 கிலோமீட்டர் பகுதிகளைச் சார்ந்த பல லட்சம் மக்களின் தொலைதூர பயணத்திற்கு கோவில்பட்டி ரயில் நிலையமே மிக முக்கியமான போக்குவரத்தாக உள்ளது.

கல்வி, வேலை, தொழில் ஆகிய காரணங்களுக்காக தொலைதூரம் செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவில்பட்டி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். மதுரை ரயில்வே கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய ரயில் நிலையங்களில் கோவில்பட்டி முதன்மையானது. ஆனால், வந்தே பார்த் ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் தரப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோவில்பட்டி சார்ந்த அதிக அளவிலான மக்கள் வந்தே பாரத் ரயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே கோவில்பட்டி மக்களின் தொலைதூர பயண தேவைக்காக வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய புதுடெல்லி - கன்னியாகுமரி, சென்னை - கன்னியாகுமரி, நாகர்கோவில் - சென்னை, கன்னியாகுமரி - ராமேஸ்வரம், செங்கோட்டை -தாம்பரம் ஆகிய விரைவு ரயில்களும் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, கொரோனாவுக்கு பின்னர் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், சென்னை - நெல்லை இடையே நாளை முதல் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தியும் தேமுதிக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் தேமுதிகவினர் தலைமை தபால் அலுவலகம் முன்பு உள்ள தபால் பெட்டியில் தென்னக ரயில்வே கோட்டமேலாளருக்கு தபால் அனுப்பி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவில்பட்டியில் தேமுதிகவினர் தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், கோவில்பட்டி ரயில்நிலைய அலுவலரிடம் தங்களது கோரிக்கை மனுவினை அவர்கள் வழங்கினர். இதில், மாநில மகளிரணி துணை செயலாளர் சுபப்பிரியா, மாவட்ட‌ அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன் ,செயற்குழு‌ உறுப்பினர் பிரபாகரன், பொதுக்குழு உறுப்பினர் காளிதாஸ், நகர செயலாளர் நேதாஜிபாலமுருகன், ஒன்றிய செயலாளர் கோவில்பட்டி மேற்கு பெருமாள்சாமி, கிழக்கு பொன்ராஜ், நக‌ர நிர்வாகிகள் பாலு ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News