கோவில்பட்டியில் கட்டிட விபத்து: இடிபாடுகளுக்குள் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
கோவில்பட்டியில் கட்டிடம் இடிக்கும் போது ஏற்பட்ட விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு கோவில்பட்டி தாமஸ் நகரில் சொந்த வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணிகளை அண்மையில் தொடங்கி உள்ளார்.
இதற்காக முதற்கட்டமாக வீட்டை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வீட்டை இடிக்கும் பணியில் ஆவல்நத்ததினைச் சேர்ந்த மணிகண்டன் (38) இன்று காலையில் இருந்து ஈடுபட்டு இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டின் மேற்பகுதியை ட்ரில்லிங் மிஷன் வைத்து இடித்து கொண்டு இருக்கும் போது திடீரென மேற்பகுதி இடிந்து உள்ளே விழுந்துள்ளது.
இதில் மணிகண்டனும் உள்ளே விழுந்துள்ளார். அப்போது சுற்று பகுதி சுவரும் இடிந்து விழ மணிகண்டன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்து மயக்கமடைந்தார். இதையெடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையெடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற தீயணைப்பு துறையினர் ஜேசிபி இயந்திர உதவியுடன் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்த மணிகண்டனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மணிகண்டன் உடலை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிடத்தை இடிக்கும்போது இடிபாடுகளுக்குள் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.