கோவில்பட்டி காவல் நிலைய கழிவறையில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

கோவில்பட்டியில் நிலப்பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்டவர் காவல்நிலைய கழிவறையில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2023-12-15 09:32 GMT

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூசைமாணிக்கம்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள பாண்டவர்மங்கலத்தை சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவர் தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும் ராஜீவ் நகரை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் இடையே ராஜீவ் நகரில் உள்ள நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது.

இது தொடர்பாக காவல் நிலையம் மற்றும் நீதி மன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரச்சினைக்குரிய இடத்தில் சந்தியா தரப்பினர் திடீரென ஒரு அறையை எழுப்பினர். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த சூசைமாணிக்கம் தரப்பினர் பிரச்சினைக்குரிய இடத்தில் கட்டப்பட்டு இருந்த அறையை சேதப்படுத்தி உள்ளனர்.

இதுதொடர்பாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் சந்தியா தரப்பினர் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, இவர்களது உறவினர்கள் சிரஞ்சிவி, தாமரைச் செல்வி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதே போன்று பாண்டவர்மங்கத்தை சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, அவர்களது உறவினர்கள் சிரஞ்சிவி, தாமரைச் செல்வி மற்றும் பாண்டவர்மங்கலத்தை சேர்ந்த ஏசுரத்தினம், கருப்பசாமி உள்ளிட்ட 6 பேர் மீது மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசார் சென்ற போது சூசைமாணிக்கம், அவரது மனைவி கமலி, அவர்களது உறவினர்கள் சிரஞ்சீவி, தாமரைச் செல்வி ஆகியோர் போலீசாருடன் காவல் நிலையத்திற்குள் வர மறுத்தது மட்டுமின்றி, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் 4 பேரையும் வலுக்கட்டயமாக ஆட்டோவில் ஏற்றி, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையில் அங்குள்ள கழிவறைக்கு சென்ற சூசைமாணிக்கம் திடீரென அங்கு இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். இதையடுத்து போலீசார் சூசைமாணிக்கத்தை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் நேற்று இரவு சூசைமாணிக்கத்தின் இரு மகள்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனையை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி அவர்களை அழைத்து செல்ல கொண்டு வந்த வாகனம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். உங்கள் தரப்பிலும் புகார் கொடுங்கள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தினை கைவிட்டனர்.

அதன் பின்னர் கைது செய்யப்பட்ட கமலி, சிரஞ்சீவி, தாமரைச் செல்வி ஆகியோர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சூசைமாணிக்கம் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பிரச்னைக்குரிய இடத்தில் கட்டப்பட்ட அறையை அகற்றுவது மற்றும் சூசைமாணிக்கத்தை போலீசார் கைது செய்தபோது அவர் வர மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் செய்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆக பதவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News